நான் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டித்தழுவியது பிரதமர் மோடிக்கும் பிடிக்கவில்லை கட்சியினருக்கும் பிடிக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனம்திறந்து பேசியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார்.
அப்போது, ராகுல் காந்தி தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது. 15 லட்சம் ,பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பெட்ரோல், டீசல் விலை, சிறுபான்மையினர், தலித்துகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ராகுல் காந்தி பேசும் போது, பாஜக உறுப்பினர்கள் கடும் அமளி செய்தனர். பிரதமர் மோடி மவுனமாக அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்தார்.
ராகுல்காந்தி பேசி முடித்ததும், பிரதமர் மோடி அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றார். தன்னை நோக்கி ஏன் வருகிறார் என்று மோடியும், பாஜக உறுப்பினர்களும் சற்று அமைதியாகவே இருந்தனர் ''தன்னைச் சிறுவன் எனப் பிரதமர் மோடி நினைத்தாலும், நான் அவரை வெறுக்கவில்லை என்று கூறி, மோடியை கட்டியணைத்ததும் மோடிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கட்டியணைத்துச் சென்ற ராகுல்காந்தியை அழைத்த மோடி கைக்குலுக்கி அனுப்பினார்.இது தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்து ராகுலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் உள்ள ஒரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி இது தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில்,
நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்கவேண்டும் என்பதே காந்திய சிந்தனை. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. என் மீது வெறுப்புணர்வு கருத்துக்களை குவித்தபோதும் அவர் மீது அன்பை வெளிப்படுத்த முற்பட்டேன். என்னிடம் பலர் அன்பாக நடந்துகொள்கிறார்கள் அவர்களை ஆரத்தழுவி என் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆனால் நான் கட்டியணைத்ததை பிரதமர் விரும்பவில்லை கட்சிக்காரர்களும் விரும்பவில்லை என்னை பொறுத்தவரை அன்பை விதைப்பதன் மூலமதான் நம் மீதான வெறுப்பை களைய முடியும் எனக்கூறியுள்ளார்.