Skip to main content

முல்லைப் பெரியாறு அணையில் எவ்வித பிரச்சனையும் இல்லை; தமிழருக்கு ஆதரவாக கேரளாவில் ஒலித்த குரல்!  

Published on 29/08/2024 | Edited on 29/08/2024
previous sc judge said that there is no problem in the Mullai Periyar dam

கேரள நாட்டிலிருந்து முல்லைப் பெரியாறு  அணைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கையை  விரல் விட்டு எண்ணி விடலாம். உச்சநீதிமன்ற நீதி அரசராக இருந்த கேரளாவைச் சேர்ந்த கே.டி.தாமஸ்  முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு பேட்டியில் சொல்லும்போது, “அணைக்குக் கீழே எனக்கு ஐந்து ஏக்கர் நிலம்  கொடுங்கள். நான் அங்கேயே வீடு கட்டி விவசாயம் செய்யப்  போகிறேன், அப்போதாவது மலையாள நாட்டு மக்கள் முல்லைப் பெரியாறு அணை மீது அச்சம் கொள்ளாதிருப்பீர்களா என்று வினா  எழுப்பினார்.

அதுபோல தன்னுடைய படைப்புக்காக சாகித்திய  அகாடமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா, “தமிழ்நாட்டுக்காரன் நமக்குக் காய்கறி தருகிறான், பால் தருகிறான், நாம் உண்ணும் எல்லாமும் அவன்  தான் கொடுக்கிறான். அவன் வயிற்றில் அடிக்கலாமா” என்று வினா  எழுப்பினார். உணவு தருபவனின் வயிற்றில் அடிக்கக்கூடாது என்று சொன்ன எழுத்தாளர் பால் சக்கரியாவின் வீடு அடுத்த நாள் அடித்து நொறுக்கப்பட்டது. அதற்குப் பிறகு கேரளாவில் முல்லைப் பெரியாறு  அணைக்கு ஆதரவாக எந்த குரலும் எழாத நிலையில் திடீரென  டெல்லி மெட்ரோவை உருவாக்கியவரும், உலகப் புகழ்பெற்ற கொங்கன் ரயில்வேயின் திட்ட இயக்குநருமான மெட்ரோ மேன்  ஸ்ரீதரன் களத்திற்கு வந்தது, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகக் கேரளாவில் கிளம்பி இருக்கும் வதந்திகளுக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்திருக்கிறது. 

previous sc judge said that there is no problem in the Mullai Periyar dam

கோழிக்கோட்டில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மெட்ரோ மேன் ஸ்ரீதரன், “முல்லைப் பெரியாறு அணை குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இன்னும்  50 ஆண்டுகளுக்கு எவ்வித பராமரிப்பு பணியும் அங்கு  தேவையில்லை எனும் அளவிற்கு அணை பலமாகவே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். சவாலான கொங்கன் ரயில்வே திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் காட்டிய மெட்ரோ மேன் ஸ்ரீதரனின் இந்த  கருத்துக்குக் கேரளாவில் பலத்த ஆதரவு எழுந்திருக்கிறது  என்பதோடு, அவர் பேசிய இடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோழிக்கோடு என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆனால் இந்த மூன்று பேரில் யாரையும் தமிழகம்  இதுவரை கொண்டாடவில்லை. ஆனால் தமிழகம் தலையில் தூக்கி  வைத்துக் கொண்டாடிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதி அரசரும், 1956 மொழிவழி பிரிவினையின் போது, தமிழக எல்லைகளைக்  கேரளாவின் பக்கம் கொண்டு போய் சேர்ப்பதில் முன்னணியில்  இருந்தவருமான, வி.ஆர். கிருஷ்ணய்யர், கடந்த 2011 ஆம் ஆண்டு இதே முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று  கொச்சியில் நடந்த 8 மணி நேர மனிதச் சங்கிலியில் தன்னுடைய  தள்ளாத வயதிலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்