குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடையைவிருக்கும் நிலையில், அதற்கான தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தரப்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்தும் முன்னெடுப்பை மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி எடுத்துள்ளார்.
இதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், வரும் ஜூன் 15- ஆம் தேதி அன்று டெல்லியில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்துள்ள அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டிருக்கிறார்.