தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தீர்மானத்தின் மீதான மசோதாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த மசோதா தொடர்பாக எந்தவித பதிலும் தரவில்லை என்று கூறப்பட்டது. அதன் பின்பு மீண்டும் இரண்டாவது முறையாகச் சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா நீண்ட தாமதத்திற்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இதுவரை ஒப்புதல் தரவில்லை என்று பலர் குற்றம் சாட்டி வந்தனர். இதற்குப் பதில் அளித்த குடியரசுத் தலைவர், நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நீட் தேர்வுக்காகப் படித்து வந்த மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, குடியரசுத் தலைவர் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் நேற்று நடந்த மாநில அளவிலான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. போட்டி என்பது வாழ்க்கையை அழகுப்படுத்தும் ஒரு நேர்மையான உணர்வாகும். வெற்றியும், தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதியாகும். இந்த இளைஞர்களின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேற உதவுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
போட்டி, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதை நேர்மறையான சிந்தனையின் மூலம் எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். மற்றவர்களிடமிருந்து உத்வேகத்தை பெறுவது நல்லது. ஆனால், ஒருவரின் உள்ளுணர்வுடன் தொடர்பு கொள்வது அவசியம். இந்த விஞ்ஞான உலகத்தில், புத்திசாலித்தனமான மாணவர்கள் மனரீதியாக இன்னும் வலுவாக இருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகள் நம் வாழ்க்கையையும், நம் அருகில் உள்ளவர்களின் வாழ்க்கையையும் சீர்குலைத்து விடும்” என்று கூறினார்.