அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரும், கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று (16/04/2022) நேரில் சந்தித்துப் பேசினார்.
சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இச்சந்திப்பில், வரவிருக்கின்ற 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கூட்டணி வியூகங்கள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், பிரசாந்த் கிஷோர் தனது தேர்தல் வியூகத் திட்டங்களையும் சோனியா காந்தியிடம் விரிவாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், "சோனியா காந்தியைச் சந்தித்த பிரசாந்த் கிஷோர் முழுக்க முழுக்க வரவிருக்கின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகத் தான் சந்தித்துப் பேசியிருக்கிறார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய குழு ஒன்று சோனியா காந்தியால் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது, பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகங்கள் குறித்து ஒரு வாரம் ஆய்வு செய்யவுள்ளது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்த அறிக்கையை அந்த குழு சோனியா காந்திக்கு சமர்ப்பிக்கும். அதன் பிறகுதான், 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் வகுப்பாரா என்று குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடனான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனை, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.