முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா தொற்று பொதுமக்களைக் கடந்து அரசியல் தலைவர்களையும் அதிகளவில் தாக்கி வருகிறது. தமிழ்நாடு, டெல்லி, மத்தியப்பிரதேசம், என பல மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தும் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், "வேறு காரணத்துக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, அங்கு எனக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் எனக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரக் காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.