வங்கிகளில் ஒப்பந்த அடிப்படையில், அதாவது அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களைப் பணியில் அமர்த்துவது, வங்கிப் பணியாளர் இடமாற்றத்தில் பாலிசி நடைமுறைகளைப் பின்பற்றாதது, பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காதது உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் அகில இந்திய வங்கிப் பணியாளர் சம்மேளனம் இன்று (19/11/2022) நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. இதற்கு ஒன்பது தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், டெல்லியில் நேற்று (18/11/2022) தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில், இன்று (19/11/2022) நடைபெறவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அகில இந்திய வங்கி ஊழியர்களின் சம்மேளனப் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.