புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப் - இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒதியம்பட்டு மெயின் ரோடு சந்திக்குப்பம் சந்திப்பில் இரு நபர்கள் சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உடனே அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கோரிமேடு காவலர் குடியிருப்பை சேர்ந்த அசோக்ராஜ் என்பவரது மகன் அரவிந்த்(எ)அரவிந்த்ராஜ் (வயது 27), வில்லியனூர் வீரவாஞ்சி நகர் மனோகரி தெருவை சேர்ந்த ஜானகிராமன் மகன் பாலா(எ)பாலகுமாரன்(வயது 26) என்பதும், இவர்கள் இருவரும் சென்னையில் சேட்டா என்ற நபரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து சிறுவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதில் அரவிந்த்ராஜ் என்பவர் புதுச்சேரி காவல்துறையில் காவலராக பணிபுரியும் போது ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தை சேர்ந்த மற்றொரு காவலரை தாக்கிய வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். தற்போது இவர் வேலையில்லாமல் கஞ்சா விற்று வருவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் அவர்களிடம் இருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 100 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த சேட்டா என்பவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.