வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறிய மக்களை அடையாளம் காண அறிமுகம் செய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவுப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2018 ஜூலை 30ல் வெளியிடப்பட்ட வரைவுப்பட்டியலில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டதால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அசாமில் வசிக்கும் மொத்த மக்களில் 19 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெயர் இந்த குடிமக்கள் பதிவேட்டின்(NRC) இறுதிப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் அசாம் மாநில எம்எல்ஏக்கள் உள்பட பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் விடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதில் குறிப்பாக சிறுபான்மை மதங்களை சேர்ந்த அரசியல் தலைவர்கள் சிலரின் பெயர்களும் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை.
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏவான ஆனந்த குமார் மற்றும் அவரது மகள் பெயர், தல்கான் காங்கிரஸ் எம்.எல்.ஏ இலியாஸ் அலியின் மகள் பெயர், அகில இந்திய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவான ரஹ்மான் பெயரும் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை.