Skip to main content

மாமனாரை காவல்நிலையத்திற்கு தரதரவென இழுத்துச்சென்ற மருமகள்!

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
மாமனாரை காவல்நிலையத்திற்கு தரதரவென இழுத்துச்சென்ற மருமகள்!

தன் வீட்டில் கழிவறை கட்டித்தராத காரணத்தால், தனது மாமனாரை காவல்நிலையத்திற்கு இழுத்துச்சென்ற மருமகள் அவர்மீது புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பீகார் மாநிலம் முசாப்பர்பூர் பகுதியில் உள்ளது செக்கன் நீரா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட நாட்களாக தனது மாமனார் மற்றும் தனது கணவரின் சகோதரரிடம் வீட்டில் கழிவறை அமைத்துத் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் இவரது கோரிக்கைக்கு காதுகொடுத்ததாக தெரியவில்லை. இதனால், அவர் திறந்தவெளி கழிப்பிடங்களுக்கு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதை அவமரியாதையாகவும் அவர் எண்ணியுள்ளார்.

இவரது கணவர் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் பீகாருக்கு செல்லும்போது மட்டும் வீட்டிற்கு வரும் மனைவி மற்ற நாட்களில் தனது பெற்றோரின் வீட்டிலேயே வசித்துவந்துள்ளார். இந்நிலையில், ஒருநாள் மீண்டும் வீட்டில் கழிவறை கட்டித் தரும்படி தனது கணவர் வீட்டாரிடம் கேட்டபோது, அவர் எப்போதும்போல கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்தப்பெண், தனது மாமனாரை தரதரவென மகளிர் காவல்நிலையத்திற்கு இழுத்துச்சென்று அவர்மீது புகார் கொடுத்துள்ளார்.

மேலும், அந்த இடத்திலேயே தனது வீட்டில் கழிவறை அமைத்துத்தருவேன் என மாமனார் மற்றும் கணவரின் சகோதரரிடம் ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கியுள்ளார் அந்தப்பெண். காவல்துறையினர் ஒருவாரத்திற்குள் கழிவறை கட்டித் தரும்படி கூறியுள்ளனர். ஆனால், பணம் தயார் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அவர்கள் இருவரும் கேட்டுள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படவே, புகாரை அந்தப்பெண் திரும்பப்பெற்றதாக காவல்நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்