சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி இண்டர்லாக் பகுதியில் மசூதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய சமூகத்தினர் வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மசூதிக்கு சென்று தொழுவார்கள். அந்த வகையில், இன்று வழக்கத்தை விட அதிகளவில் வந்த இஸ்லாமியர்கள் இந்த மசூதிக்கு தொழுகைக்காக கூடினர். இதனால், அந்த மசூதியில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அங்கு வந்த இஸ்லாமியர்கள் மசூதிக்கு வெளியே உள்ள சாலையில் தொழுகை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அவர்களைக் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், அவர்கள் தொழுகையில் மும்முரமாக இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் ஒருவர், தொழுகை செய்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இஸ்லாமியர்களைக் காலால் எட்டி உதைத்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் டெல்லி வடக்கு போலீஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.