இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைப்பேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது.
அதனைத்தொடர்ந்து, இந்திய உச்ச நீதிமன்றத்திலும் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்தநிலையில், அண்மையில் பதவியேற்ற இந்தியாவிற்கான இஸ்ரேலின் புதிய தூதர் நேற்று (28.10.2021) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவிற்கு இஸ்ரேல் தூதரகமோ அல்லது இஸ்ரேல் அரசோ ஒத்துழைப்பு வழங்குமா என கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர், "(பெகாசஸை தயாரிக்கும் நிறுவனமான) என்.எஸ்.ஓ ஒரு தனியார் இஸ்ரேலிய நிறுவனம். அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் உரிமம் பெறுவது அவசியம். அரசாங்கங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமே நாங்கள் ஏற்றுமதி உரிமத்தை வழங்குகிறோம். அவர்களால் பெகாசஸை அரசு சாரா நிறுவனங்களுக்கு விற்க முடியாது. இந்தியாவில் நடப்பது இந்தியாவின் உள்விவகாரம். உங்கள் உள் விவகாரங்களுக்குள் நான் செல்ல மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.