இந்தியாவின் இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் கேபினட் அமைச்சர்கள், இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் என மொத்தம் 57 எம்பிக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இரண்டாவது முறையாக பதவியேற்று பிரதமர் தலைமையில் நேற்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் கேபினட் அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இதில் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நாடு முழுவதும் உள்ள 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6000 நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல், விவசாயிகள் செலுத்தும் பிரிமியம் தொகைக்கு இணையான தொகையை மத்திய அரசு செலுத்தி, 60 வயது மேல் உள்ள விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல், ஜூன் -17 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டுவது, ஜூலை - 5 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். பிரதம அலுவலகத்திற்கு சென்ற மோடி மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் சிலைகளை வணங்கி, பின்பு இந்தியாவில் நக்சல் அல்லது தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழக்கும் காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு நிதியத்தின் கீழ் உயிரிழந்த வீரர்களின் ஆண் குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்பட்டு வந்தது. இந்த நிதியை தற்போது 2500 ஆக உயர்த்தப்பட்டது. அதே போல் வீரர்களின் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 2250 நிதி வழங்கப்பட்டு வந்தது, தற்போது ரூபாய் 3000 உயர்த்தி அதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்று கோப்பில் இடும் முதல் கையெழுத்து இதுவாகும். இந்த தொகையானது "PM´s Scholarship Scheme" திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் உயிரிழந்த வீரர்களின் வாரிசுக்கு மாதம் தோறும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.