பெட்ரோகெமிக்கல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று (14/02/2021) காலை சென்னை வந்தார். பின்பு, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.
பின்னர் சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு தனிவிமானம் மூலம் கேரளா மாநிலம் கொச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
அதன்படி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் புரோப்லின் டெரிவேடிவ் பெட்ரோகெமிக்கல் திட்டத்தை நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார். இந்த திட்டத்தின் மூலம் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் அக்ரிலேட், அக்லிக் அமிலம், ஆக்சோ- ஆல்கஹால் ஆகியவை தயாரிக்கப்படும். திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 3,700 கோடி முதல் ரூபாய் 4,000 கோடி வரை அந்நிய செலாவணி மிச்சமாகும். ரூபாய் 6,000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த வளாகம் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம், எர்ணாகுளம் தளத்தில் நவீன் வசதிகளைக் கொண்ட 'சாகரிகா' சர்வதேச கப்பல் முனையம் ரூபாய் 25.72 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதலாவது முழு சர்வதேச கப்பல் முனையமாகும். இந்த சர்வதேச கப்பல் முனையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அதேபோல், கொச்சி வெலிங்டன் தீவில் எம்வி ஆதி சங்கரா, எம்வி சி.வி.ராமன் பெயர் கொண்ட இரண்டு ரோ- ரோ கப்பல்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர். பொல்கோட்டி- வெலிங்டன் தீவுக்கும் இடையே இரண்டு ரோல் ஆன்/ ரோல் ஆப் கப்பல்கள் பயன்படுத்தப்படும். 80 வாகனங்கள், 30 பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்டவையாகும் ரோ- ரோ கப்பல்கள்.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கடல்சார் பொறியியல் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கடல்சார் பொறியியல் நிறுவனம் இந்தியாவில் கப்பல் கட்டும் தளத்தில் இயங்கும் ஒரே நிறுவனமாக இது திகழும். கப்பல் கட்டுமானம், பழுது நீக்குதல் பிரிவில் பல்வேறு கப்பல்களின் பயிற்சி பெறுவோருக்கு நவீன பயிற்சி வழங்கப்படும். ரூபாய் 27.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் 114 புதிய பட்டதாரிகளை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொச்சி துறைமுகத்தில் தெற்கு நிலக்கரி தள கட்டுமான திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ் ரூபாய் 19.19 கோடியில் நிலக்கரி தளம் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது. திட்டம் முடிவுற்றவுடன் கொச்சி துறைமுகத்தில் பிரத்யேக ரசாயன கையாளுதலுக்கு இது பயன்படும்.
இந்த நிகழ்ச்சியில் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்கள், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.