பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். இவர் இந்த தொகுதியின் எம்.பி.யாக 2வது முறையாக இருக்கிறார். இந்த நிலையில், வாரணாசியில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், தனது தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து, பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அதன்படி, வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
இதற்காக உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில், ரூ.121 கோடி மதிப்புள்ள நிலத்தை வாரணாசியில் கையகப்படுத்தி கொடுத்துள்ளது. மேலும், இந்த மைதானம் 30 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் ரூ.450 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானத்தில் சுமார் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது.
கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப்பகுதிகள், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக அதன் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “உத்தரப் பிரதேசத்தில் கட்டப்பட்ட முதல் கிரிக்கெட் மைதானம் இது தான். இந்த மைதானத்தை கட்ட பி.சி.சி.ஐ பெரிய அளவில் பங்களித்துள்ளது. முன்னதாக டெல்லி, மும்பை, மற்றும் சென்னையில் மட்டுமே அனைத்து வசதிகளுடன் கூடிய மைதானங்கள் இருந்தன. இப்போது தொலைதூர இடங்களில் உள்ள வீரர்களுக்கும் இந்த வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்பு விளையாட்டு கூடுதல் செயலாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது அது பள்ளிகளில் இரு கல்வியாகக் கற்பிக்கப்படும்.
‘மகாதேவ்’ நகரில் உள்ள இந்த சர்வதேச மைதானம், ‘மகாதேவ்’ என்பவருக்கே அர்ப்பணிக்கப்படும். வாரணாசியில் சர்வதேச மைதானம் கட்டினால் இங்குள்ள வீரர்கள் பயன்பெறுவார்கள். இந்த மைதானம் பூர்வாஞ்சல் பிராந்தியத்தின் நட்சத்திரமாக மாறும். ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று முதல் தொடங்கவிருக்கிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விளையாட்டு போட்டிகளில் இந்தியா கண்டுவரும் வெற்றி, விளையாட்டு மீதான பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் சான்றாகும். ஒவ்வொரு நிலையிலும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது” என்று பேசினார்.