பிரதமர் மோடி இன்று காலை மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி 5 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் பின் ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்கு செல்கிறார்.
அமெரிக்க பயணத்திட்டத்தின்படி ஜூன் 21 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளார். 22 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதிக்க உள்ளார். அன்றைய தினமே அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். அன்றைய தினமே அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்க உள்ளனர். ஜூன் 23 இல் அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளங்கன் ஆகியோர் இணைந்து அளிக்கும் மதிய விருந்திலும் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், “ஜூன் 23 முதல் பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடன் பல துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரதமரின் இந்த பயணம் இருநாடுகளின் நல்லுறவில் மிக முக்கியப் பயணம். இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு என்பது பிரதமரின் இந்த பயணத்தில் மிக முக்கிய விஷயமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.