ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது, ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தலிபான்களுக்குப் பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருகின்றனர். பல்வேறு நாடுகளும் ஆப்கானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் நிலை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நேற்று (17.08.2021) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை குறித்தும், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவிற்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் அதிகாரிகளை அறிவுறுத்தியதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு உதவி செய்யவும் பிரதமர் அறிவுறுத்தியதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.