நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நாளை(18.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்குக் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்கள் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து, அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் வரை இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற செய்தி இதழியில் விளக்கமளித்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாக மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்தும் இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டாலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கூட்டத்தொடருக்குச் செல்வதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, “சந்திரயான் 3திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய விஞ்ஞானிகளைப் பாராட்டுகிறேன். பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் ஜி 20 மாநாடு நடைபெற்றுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும். நாட்டில் உற்சாகமான சூழல் நிலவுகிறது; இந்தியாவின் மூவர்ணக் கொடி நிலவிலும் பறக்கிறது. 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும். அனைத்து நிகழ்வுகளும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை எடுத்துக் காட்டுகின்றன; இந்தியாவின் முன்னேற்றத்தை உலகமே பாராட்டுகிறது. சில நாட்கள் மட்டுமே நடத்தாலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கூட்டத்தொடர் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடியதாக அமையும்; அனைத்து உறுப்பினர்களும் சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும்” என்றார்.