பிரதமர் மோடி கர்நாடகாவில் புதிதாகப் பதவியேற்றுள்ள சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னால் முதல்வர் சித்தராமையா மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவி வந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் சித்தராமையா முதல்வர் என்றும், டி.கே.சிவகுமார் துணை முதல்வர் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே உள்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு பேசிய சித்தராமையா, “பல்வேறு பணிகளுக்கு இடையே விழாவிற்கு வருகை தந்த தலைவர்களுக்கு நன்றி. காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றப்படும்” என்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடி, “கர்நாடக மாநில முதல்வராகப் பதவியேற்றுள்ள சித்தராமையாவுக்கும் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கும் பதவிக்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” என தனது சமூக வலைதளப் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.