2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2021) தாக்கல் செய்தார். சுமார் 1 மணிநேரம் 50 நிமிடங்கள் இந்தப் பட்ஜெட் உரை நீடித்தது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக இந்த பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்த பட்ஜெட்டில், புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அணுகுமுறையை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், "வரிச்சுமையை சாமானிய மக்கள் மீது ஏற்றுவோம் என்று பலர் நினைத்தார்கள். இருப்பினும், நாங்கள் ஒரு வெளிப்படையான பட்ஜெட்டில் கவனம் செலுத்தினோம். இந்த பட்ஜெட்டின் மூலம் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துதல், மனித வளங்களுக்கு ஒரு புதிய உயரத்தைத் தருதல், உள்கட்டமைப்பிற்கான புதிய பிராந்தியங்களை உருவாக்குதல், தொழில்நுட்பத்தை நோக்கிச் செல்லுதல் அதுமட்டுமில்லாமல் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல் ஆகியவற்றுக்கான அணுகுமுறையை நாங்கள் எடுத்துள்ளோம்" எனக் கூறியுள்ளார்.
"இந்தப் பல முறையான மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன, இது நாட்டில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டை விட இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த பட்ஜெட் இந்த தசாப்தத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. நாட்டில் விவசாயத் துறையை வலுப்படுத்த, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எளிதாக அதிக கடன்களைப்பெற முடியும். நாட்டின் மண்டிகளை வலுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.