Skip to main content

“இந்த வழியைப் பின்பற்றினால் தேர்வுக்கு முழுமையாகத் தயாராகிவிடுவீர்கள்” - பிரதமர் மோடி அறிவுரை

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
PM Modi advice for Exam writing students

பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி இன்று (29-01-24) டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். 

அப்போது பேசிய பிரதமர் மோடி, “மாணவர்களின் மதிப்பெண் அட்டையை அவர்களுடைய சில பெற்றோர்கள் விசிட்டிங் கார்டாக கருதுகின்றனர். அப்படி இனிமேல் கருதக்கூடாது. தங்கள் பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாது. அவ்வாறு ஒப்பிட்டு பேசுவதால் அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். மாணவர்கள் மற்றவர்களோடு போட்டி போடாமல் தங்களோடு தாங்களே போட்டி போட வேண்டும். வாழ்க்கையில் போட்டிகள் இருக்க வேண்டும். ஆனால், அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். 

சில நேரங்களில் மாணவர்கள் தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள். பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். அதனை சமாளிக்க நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்வுக்குத் தயாராகும்போது சிறிய இலக்குகளை நிர்ணயித்து படிப்படியாக செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த வழியைப் பின்பற்றினால் தேர்வுக்கு முன்பே முழுமையாக தயாராகிவிடுவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் தான் மாணவர்கள் தங்களுடைய இலக்கை அடைய முடியும். இன்றைய மாணவர்கள் தான் நாளைய இந்தியாவை வடிவமைக்கப் போகிறவர்கள். இன்றைய மாணவர்கள் முன்பைவிட புதுமைகளை அதிகம் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்