மேற்கு வங்கம் மாநிலத்தின் ஷேத்திரிய பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக பேசினார். அப்போது மேற்குவங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அதில் அவர், “மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்த போது வாக்காளர்களை அச்சுறுத்தி அவர்களின் வாழ்க்கையை ஆளும் கட்சியினர் நரகமாக்கிவிட்டனர். ஜனநாயகத்தின் வெற்றியாளர்கள் என்று தங்களைக் காட்டிக்கொள்வதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒழிக்க சதி செய்கிறார்கள். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாக்கு எண்ணிக்கை நாளின் போது ரவுடிகளிடம் வாக்குப்பதிவு சாவடிகளை கையகப்படுத்துமாறு ஒப்பந்தம் அளித்தனர். அந்தக் கட்சியானது அபாயகரமான தாக்குதல்களை நடத்தி வேலையை முடித்துக் கொள்கின்றனர்” என்று கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “ மக்களை முட்டாள் என்று நினைக்காதீர்கள். சில சமயம் மக்களை ஏமாற்றலாம். ஆனால், அனைத்து நேரங்களிலும் மக்களை ஏமாற்ற முடியாது. அதனால் ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள். உங்கள் மக்கள் தான் 16இல் இருந்து 17 பேர் வரை கொலை செய்தார்கள். ஆதாரம் இல்லாமல் பிரதமர் மோடி பேசுகிறார். நாடு இறக்க வேண்டும். சாமானிய மக்கள் பாதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பா.ஜ.க அரசு தோல்வியுற்ற அரசாக இருக்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மல்யுத்த வீரர்கள் மீதான வன்கொடுமைகள், மணிப்பூரில் நடக்கும் கொடுமைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் நடக்கும் கொடுமைகளிலும் ஈடுபட்டுள்ளவர்கள்" மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலில் பா. ஜ.க ஆளும் மாநிலங்களை கவனித்துக் கொள்ளுங்கள். மேற்கு வங்கம் அமைதியாக தான் இருக்கிறது. பிரதமர் மோடியால் ஊழலுக்கு தீர்வு காண முடியாது. ஏனென்றால், அவரது அரசாங்கமே ஏற்கனவே, பி. எம். கேர்ஸ் நிதி, ரஃபேல் மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற பல சிக்கலில் உள்ளது" என்று கூறினார்.