டெல்லியில் பிட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள 72 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 12,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் பிட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள 72 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், " சட்டர்பூரில், பிட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடைய 17 டெலிவரி செய்யும் நபர்கள், 72 வீடுகளில் இந்த நபரிடம் பிட்சா வாங்கிய நபர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஒருமாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்த நபர், மருத்துவரிடம் சென்றபோது சாதாரண இருமல், சளி என நினைத்து மருத்துவர் சிகிச்சையளித்துள்ளார். ஆனால் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அந்த நபருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.