சிக்கன் 'ஷவர்மாவை' சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையம் அருகே உள்ளது 'ஐடியல் ஸ்னாக்ஸ்' என்ற உணவகம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காகக் காத்திருக்கும் போது, இந்த உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு, இங்கு 'ஷவர்மா' சாப்பிட்ட சுமார் 15 பள்ளி மாணவர்கள் உள்பட 30- க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கெட்டுப்போன சிக்கன் 'ஷவர்மாவை' சாப்பிட்டதால் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு தந்தையை இழந்த இச்சிறுமி தனது பெரியம்மா வீட்டில் தங்கி 12- ஆம் வகுப்பு படிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆசை ஆசையாய் சாப்பிட்ட உணவே நஞ்சாகி உயிரைப் பறித்துவிட்டது.
சம்பந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்த கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதற்கு சீல் வைத்தனர். 'ஷவர்மா' சாப்பிட்ட மாணவி உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், உணவகத்தின் உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.
இறைச்சியை தீயில் வேகவைத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மசாலா கலந்த பின்னர், அதனை ரொட்டியால் சுற்றி 'ஷவர்மா' என்ற பெயரில் விற்கப்படும் இந்த உணவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
எந்த உணவாக இருந்தாலும், அதன் தரமே பிரதானம் என்ற நிலைமாறி வணிக நோக்கத்துடன் சில உணவகங்கள் செயல்படுவதை, இது போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.