இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைப்பேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஃப்ரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்திய உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.
இந்தநிலையில் இன்று பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது; கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, பெகாசஸ் பிரச்சனையை நாங்கள் எழுப்பினோம். இன்று உச்சநீதிமன்றம் தனது கருத்தைக் கூறி நாங்கள் சொல்வதை ஆதரித்துள்ளது.
நாங்கள் போராடினோம். ஆனால் பதில் கிடைக்கவில்லை. நாங்கள் பாராளுமன்றத்தை முடக்கினோம். அப்போதும் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. இப்போது எங்கள் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் கேள்விகள் அப்படியே இருக்கின்றன.
பெகாசஸ் பயன்பாட்டை அங்கீகரித்தவர் யார்? பெகாசஸை வாங்கியவர் யார்? பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்கள் யார்? யார் யார் தாக்கப்பட்டார்கள்? வேறு எந்த நாடும் நமது மக்களை பற்றிய தரவுகளை வைத்துள்ளதா? அவர்களிடம் என்னென்ன தகவல்கள் உள்ளன ?. இவைதான் நாங்கள் எழுப்பிய அடிப்படை கேள்விகள்.
பெகாசஸ் இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி. இந்த விவகாரத்தை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரிய நடவடிக்கை. இதன்மூலம் உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கண்டிப்பாக பாஜக அந்த விவாதத்தை விரும்பாது. ஆனால் நாங்கள் விவாதம் நடத்த வலியுறுத்துவோம். இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது, நீதிமன்றம் அதை முன்னெடுத்துச் செல்லும்.ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த அழுத்தம் கொடுப்போம்.
முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள், பாஜக அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது. பெகாசஸ் மூலம் பெறப்பட்ட தகவல்களைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் பெறுகிறார்களா? தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு விவரங்கள் பிரதமரிடம் சென்றால் அது குற்றச் செயலாகும்.
தேசத்தின் பிரதமர் மற்றொரு தேசத்துடன் கூட்டுச் சேர்ந்து, தலைமை நீதிபதி, முன்னாள் பிரதமர்கள் மற்றும் முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட தனது சொந்த குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தினால், அது தேசத்தின் மீதான தாக்குதல்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.