கேரள மாநிலம் இருட்டி பகுதியை சேர்ந்தவர் சபீர். இவர் அப்பகுதியில் கடலை வியாபாரம் வருகிறார். இவருக்கு லாட்டரி சீட்டு வாங்கு பழக்கம் இருப்பதால் வாரவாரம் லாட்டரி சீட்டு வாங்கி விடுவார். அப்படி அவரால் வாங்க முடியவில்லை என்றாலும், லாட்டரி கடைக்காரரிடம் சொல்லி தனக்கான லாட்டரி சீட்டுக்களை தனியாக கவரில் எடுத்து வைக்க சொல்லிவிடுவார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வெளியூர் சென்ற காரணத்தால் லாட்டரி சீட்டு வாங்க முடியவில்லை. எனவே அவரின் கடைக்கு அருகில் இருந்த லாட்டரி விற்பனை செய்பவரிடம் தனக்கு மூன்று லாட்டரி சீட்டுக்களை தனியாக எடுத்து வைத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். அவரும் அவ்வாறே எடுத்து வைத்து கவரில் சபீர் என்று எழுதி வைத்திருந்தார்.
இந்நிலையில், அவர் எடுத்து வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கு குலுக்கலில் 60 லட்சம் பணம் விழுந்துள்ளது. இதை கேள்விப்பட்ட கடைக்காரர், அதனை சபீரிடம் தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற சபீர், "தற்போது புதிதாக வீடுகட்ட 15 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அதனை இந்த பணத்தை கொண்டு அடைத்து விடுவேன்" என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.