குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறியது. இரு அவைகளிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு பின் சட்டமாக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "குறைந்தபட்ச ஆதார விலை, அரசே கொள்முதல் செய்யும் முறை தொடரும் என மீண்டும் சொல்கிறேன். விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது. வேளாண் மசோதாக்கள் மூலம் எதிர்கால தொழில்நுட்பத்தை விவசாயிகள் எளிதில் அணுக முடியும். வேளாண் மசோதாக்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் சிறந்த பலனையும் தரும். கட்டுப்பாடுகள், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளை வேளாண் மசோதாக்கள் விடுவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ்க்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கடிதம் அளித்துள்ளனர்.