![Paranormal granny in ghostly guise; A viral video](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZwQKOdW9hnOKxHSw7ZUdlj4lfaeT2G5APRimq2An_no/1690804594/sites/default/files/inline-images/a890.jpg)
'ப்ராங்க்' என்ற பெயரில் முன்பின் தெரியாதவர்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் நடந்து கொள்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அதேபோல் பேய்கள் போல வேடமிட்டு சாலையில் செல்வோரை நள்ளிரவில் அச்சுறுத்தும் ப்ராங்க் நிகழ்ச்சிகள் தொடர்பான வீடியோ காட்சிகளும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் பேய் போல வேடமிட்டு சுற்றித் திரிந்த பாட்டி ஒருவரை அந்தப் பகுதி மக்கள் காருடன் சிறை பிடித்து எச்சரிக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பேய் வேடமிட்டுக்கொண்டு பெண் ஒருவர் சுற்றி வருவதாகத் தகவல் பரவியது. இதை அறிந்த சிலர் காரில் வந்த அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்றனர். அப்பொழுது சுற்றி வளைத்துப் பிடித்ததில், அவர் ஒரு மூதாட்டி என்பது தெரியவந்தது. அவர் பேய் போன்ற அலங்காரத்துடன் வெள்ளை நிற ஆடையை உடுத்தியிருந்ததோடு, சடலங்களுக்கு முகத்தில் கட்டும் துணியைப் போல துணி ஒன்றையும் கட்டியிருந்தார். உடனே அந்த இளைஞர்கள் 'இப்படி சாலையில் செல்பவர்களை அச்சுறுத்தக் கூடாது. மீறி இதுபோல் மீண்டும் நடந்து கொண்டால் போலீஸாரிடம் சொல்லுவோம்' எனத் தெரிவித்தனர்.
அதற்கு அந்த பாட்டி, ‘எனக்கு போலீசார் மீது பயமில்லை. நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்' என அந்த இளைஞர்களைப் பதிலுக்கு எச்சரித்தார். அந்தப் பாட்டியினுடைய காரில் ஆங்காங்கே மந்திரச் சொற்கள் எழுதப்பட்டு ஒட்டப்பட்டு இருந்தது. தற்பொழுது பேய் வேடத்தில் பாட்டி இளைஞர்களிடம் நடத்தும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.