2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் மோடி வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கூறினார். ஆனால், மோடி வெற்றிபெற்ற பிறகு காஷ்மீர் பிரச்சனை எப்படி தீர்த்திருக்கிறார் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இம்ரான் கான் அரசு பதவியில் நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை. முன்பு அவரை மக்கள் தேர்வு செய்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் இப்போது அவரை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்று பாகிஸ்தான் மதகுரு மவுலானா பஸ்லுர் ரஹ்மான் கூறினார்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக ஜமாயத் உலமா இ இஸ்லாம் அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறுகிறது. தலைநகர் இஸ்லாமாபாதை ஸ்தம்பிக்கச் செய்த இந்த போராட்டம் பாகிஸ்தானையே ஸ்தம்பிக்கச் செய்யும் என்று மவுலானா எச்சரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தை நாங்கள் எங்கள் கவுரவமாக கருதுகிறோம். தேர்தல் முறைகேடுகள் தொடரும் நிலையை ராணுவம் தலையிட்டு தடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மத்தியில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எல்லோரும் இணைந்தே போராடுகிறோம் என்றும் மவுலானா கூறினார்.