பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் தொடர்ந்துவருகிறது. அண்மையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் இடையே நடைபெற்றுவந்த மோதலை நிறுத்த, சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸின் தலைவராக்கப்பட்டார்.
இருப்பினும் கோஷ்டி பூசல் தீரவில்லை. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து, கேப்டன் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து சரண்ஜித் சிங் சன்னி என்பவர் பஞ்சாபின் புதிய முதல்வராக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து கேப்டன் அமரீந்தர் சிங் பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் அதனை மறுத்தார். இந்தச் சூழலில் கேப்டன் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கப்போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் கேப்டன் அமரீந்தர் சிங், புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக தனது ஊடக ஆலோசகர் மூலமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவின்படி, "பஞ்சாபின் எதிர்காலத்திற்கான போர் நடந்துகொண்டிருக்கிறது. பஞ்சாபின் நலனுக்காகவும், ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் பிழைப்புக்காக போராடும் விவசாயிகள் உட்பட பஞ்சாப் மக்களின் நலனுக்காவும் சேவை செய்ய சொந்த அரசியல் கட்சி தொடங்குவதை விரைவில் அறிவிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கேப்டன் அமரீந்தர் சிங், "விவசாயிகளின் போராட்டம், விவசாயிகளுக்கு சாதகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டால், 2022 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு நடக்கும் என எதிர்பார்க்கிறேன். பிரிந்த அகாலி குழுக்கள் (சிரோமணி அகாலி தளத்திலிருந்து பிரிந்த கட்சிகள்), குறிப்பாக திண்ட்சா மற்றும் பிரம்புரா பிரிவுகள் போன்ற ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணியை எதிர்பார்க்கிறேன்" என கூறியதாக ரவீன் துக்ரல் தெரிவித்துள்ளார்.