பாஜக ஆட்சியில் மட்டும்தான் ரயில் விபத்துகள் நடக்கிறதா? - பியூஷ் கோயல் கேள்வி
இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் தொடர் ரயில் விபத்துகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டும் பொறுப்பேற்க முடியாது என மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ரயில்வே தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘ரயில்வே துறையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், விபத்துகளுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் பொறுப்பேற்க முடியாது. நான் பிரச்சனை இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். இதிலிருந்து ரயில்வே துறையை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ரயில்வே துறையில் இருப்பவை நீண்டகால பிரச்சனைகள். இவை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியிலும் இருந்தவைதான். 2104ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியிலும் இது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதை அரசியலாக்குவதை விட்டுவிட்டு நல்ல அறிவுரைகள் தந்தால் அதன் மூலம் மக்களுக்கு உதவிட முடியும். புல்லட் ரயில்களை எதிர்ப்பவர்கள் புதிய தொழில்நுட்பங்களை மக்கள் அனுபவிக்கக் கூடாது என எண்ணுபவர்களே. நாம் இன்னமும் நூறாண்டுகால பழமைவாய்ந்த தொழில்நுடங்களைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற விவாதத்தை யாரும் முன்வைப்பதே இல்லை’ என தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் உள்ள ரயில்நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து ரயில்வேதுறையில் பல்வேறு கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்த தகவலை அமைச்சகம் அறிவித்துள்ளது. ரயில்வே துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் அடுத்து வரும் 18 மாதங்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மேம்பாடு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- ச.ப.மதிவாணன்