உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அயோத்தியில் இன்று ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்ட புனிதமான தருணத்தில் இந்திய மக்கள் தங்கள் வீடுகளின் கூரையில் சொந்தமாக சோலார் கூரை அமைப்பை வைத்திருக்க வேண்டும் என்ற எனது தீர்மானம் மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி இந்தியாவில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக 'பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனா' என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணம் குறைவது மட்டுமின்றி, எரிசக்தி துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும். அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு இது” எனப் பதிவிட்டுள்ளார்.