நடந்து முடிந்த மக்களைவைத் தேர்தலில், ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் என்ற பட்சத்தில், அவர் ஏற்கெனவே பதவி வகித்த வயநாடு தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அதனால், வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அந்த தொகுதிக்கு வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரசின் பிரியங்கா காந்தி போட்டியிட இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சத்யன் மோக்கேரி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், அந்த தொகுதியில் போட்டியிடம் பா.ஜ.க வேட்பாளர் பெயரை அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் நவ்யா ஹரிதாஸ் என்பவர் போட்டியிடுகிறார். பிரியங்கா காந்திக்கு எதிர்த்து குஷ்பு களமிறங்க இருப்பதாக தகவல்கள் வந்ததையடுத்து, இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.