இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு அவர் அளித்த முதல் உரையில், “அரசாங்கம் என்று வரும்போது, மோடி மட்டும் அல்ல, ஆயிரக்கணக்கான மனங்களும் அவருடன் இணைந்துள்ளன. இதில் ஆயிரக்கணக்கானவர்களின் மூளைகள், ஆயிரமாயிரம் கரங்கள் உழைக்கின்றன. இந்த மாபெரும் வடிவத்தின் விளைவாக, சாமானியனும் கூட அதன் திறன்களை அடைய முடிகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் இருந்த பிம்பம் என்னவென்றால், பிரதமரின் அலுவலகம் (PMO) ஒரு சக்தி மையம், மிகப் பெரிய சக்தி மையமாக இருந்தது. நான் அதிகாரத்திற்காகப் பிறக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு முதல் நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள், அதிகார மையமாக மாற வேண்டும் என்பது எனது விருப்பமோ அல்லது எனது பாதையோ அல்ல. பிரதமரின் அலுவலகம் என்பது மக்களின் அலுவலகமாக இருக்க வேண்டும். அது மோடியின் அலுவலகமாக இருக்க கூடாது. நாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரே ஒரு இலக்கை கொண்டு செயல்பட வேண்டும். முதலில் தேசம் ஆகும். ஒரே ஒரு நோக்கம் அதாவது 2047 இல் வளர்ச்சியைடந்த பாரதம் (விக்சித் பாரத்).
இந்த நேரத்தில் பதவி தொடங்கி இந்த நேரத்தில் முடிவடையும் நபர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நமது சிந்தனைக்கு வரம்புகள் இல்லை. நமது முயற்சிகளுக்கு எந்த அளவுகோலும் இல்லை. 10 ஆண்டுகளில் நான் நினைத்ததை விட அதிகமாகச் சிந்திப்பதும், அதைவிட அதிகமாகச் செய்வதும் இப்போது எனது கடமை என்று நினைக்கிறேன். இதனை நான் 10 வருடங்களில் செய்தேன். இப்போது செய்ய வேண்டியது என்னவெனில், நாம் நேற்று என்னவாக இருந்தோம், இன்று எவ்வளவு நன்றாகச் செய்தோம் என்ற இலக்கை நோக்கிச் செய்ய வேண்டும். வேறு யாரும் அடையாத இடத்திற்கு நம் நாட்டை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும்” எனப் பேசினார்.