கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்டுள்ள விபத்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது. தற்போதைய நிலவரப்படி 280 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “மீட்புப் பணிகள் சவாலாக உள்ளது; ரயில்வே துறை, மத்திய, மாநில பேரிடர் படைகள், தீயணைப்பு குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளோம். மேலும் ரயில்வே ஆணையரும் தனித்த விசாரணை மேற்கொள்வார். இந்த விபத்து குறித்து தன்னிச்சையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை நடத்தப்படும். ரயில்வே, என்.டி.ஆர்.எஃப் (NDRF), எஸ்.டி.ஆர்.எஃப் (SDRF) மற்றும் மாநில அரசு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தெரிவித்துள்ளன.