வங்கக் கடலில் புதிய புயல் உருவாகி உள்ள நிலையில், இனி வரும் ஆண்டுகளில் இந்தியாவில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெப்பத்தால் கடல் நீர் விரைவில் சூடாகி கடல் மேற்பரப்பில் பெரும்பாலான காற்று மேலெழும்பி விடுவதால் அந்த வளிமண்டல பகுதியில் குறைந்த காற்றழுத்தம் ஏற்படுகிறது. இந்த குறைந்த காற்றழுத்தத்தை நிரப்ப சுற்று வட்டத்தில் உள்ள காற்று சுழன்று விரைந்து வெற்றிடம் நோக்கி வரும் நிலையில், மேலே உறைந்த மேகமும் வெற்றிடம் தேடிவரும் காற்றோடு சேர்ந்து சுழல்கிறது. இப்படி தொடர்ந்து நடைபெறும் நீராவிப்போக்கு அந்தப் பகுதியில் பெரிய அளவில் குறைந்த காற்றுழத்த மண்டலத்தை உருவாகுகிறது. அப்படி உருவாகும் குறைந்த காற்றழுத்த மண்டலத்தின் காற்றின் வலிமையை அதிகரித்துக் கொண்டே செல்வதால் அது புயலாக மாறுகிறது. இவ்வாறு உருவாவதுதான் புயலாகும்.
2012 ஆம் ஆண்டு வங்கக்கடலில் 'நீலம்' என்ற ஒரேயொரு புயல் மட்டுமே உருவானது. அதேபோல் 2013 -ல் மடி, வியரு உள்ளிட்ட நான்கு புயல்கள் இந்தியாவைத் தாக்கின. அதனைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அரபிக்கடலில் உருவான ஒரு புயல் மட்டுமே கேரளாவில் கரையை கடந்தது. 2015 ஆம் ஆண்டு ஒரு புயல் கூட இந்தியாவில் நேரடியாக கரையை கிடைக்கவில்லை. ஆனால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி சென்னையில் அதிக மழைப்பொழிவை கொடுத்தது. 2016-ல் ரோனோ, வர்தா என இரண்டு புயல்கள் தமிழகத்தில் கரையைக் கடந்தன.
2017ஆம் ஆண்டு எந்த புயல்களும் நேரடியாக தமிழகத்தில் கரையை கடக்கவில்லை என்றாலும் 'ஒக்கி' புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 2018 ஆம் ஆண்டு டையூ, தித்லி அதேபோல் மறக்க முடியாத கஜா உள்ளிட்ட நான்கு புயல்களால் இந்தியாவின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு ஐந்துக்கும் மேற்பட்ட புயல்கள் வங்கக்கடலிலும், அரபிக்கடலிலும் உருவாகின. அதேபோல் 2020 ஆம் ஆண்டு சூப்பர் புயல், மிக அதி தீவிர புயலென 5 புயல்கள் உருவாகி அதில் 3 புயல்கள் இந்தியாவில் கரையை கடந்தன
இப்படி கடந்த சில ஆண்டுகளாக புயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு புவி வெப்பமயமாதலே காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வரும் ஆண்டுகளிலும் இந்தியாவில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் புயல்கள் விரைவாக தீவிர புயலாக மாறுவதும் அதிகரித்து வருகிறது. உதாரணமாக அண்மையில் ஏற்பட்ட 'டவ் தே' புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக வலுவடைந்தது என்பது குறிப்பாக வல்லுநர்களால் நோக்கப்படுகிறது.