மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகியவர்கள் மீண்டும் அந்த கட்சியில் இணைய முயன்று வருகின்றனர்.
இதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸில் இருந்து சென்று, பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த முகுல் ராய் மீண்டும் அண்மையில் திரிணாமூல் காங்கிரஸுக்கே திரும்பினார். இந்நிலையில் வடக்கு மேற்குவங்கத்தைச் சேர்ந்த அலிபுர்துர் மாவட்ட பாஜக தலைவர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏழு பாஜக தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், அதன்பின்னர் தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலும் வடக்கு மேற்கு வங்கத்தில்தான் பாஜக அதிக தொகுதிகளை வென்றது. இந்நிலையில், வடக்கு மேற்குவங்கத்திலிருந்து பாஜக தலைவர்கள் விலகியிருப்பது அக்கட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த அலிபுர்துர் மாவட்ட பாஜக தலைவர், "வடக்கு மேற்குவங்கத்தில்தான் பாஜகவின் வளர்ச்சி ஆரம்பமானது. அக்கட்சியின் முடிவு அங்கிருந்தே தொடங்கும்" எனக் கூறியுள்ளார். மேலும், சட்டப்பேரவை தேர்தலில், பாஜக தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் வேட்பாளர் தேர்வு நடைபெற்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.