நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இதனிடையே, கேரளாவில் இதுவரை கால் பதிக்காத பா.ஜ.க, இந்தத் தேர்தலில் முதல் முறையாக ஒரு தொகுதியைப் பிடித்துள்ளது. கேரளா மாநிலம், திருச்சூர் மக்களவைத் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி, பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரையும், காங்கிரஸ் வேட்பாளரையும் தோற்கடித்து, 4,12,339 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், திருச்சூரில் சுரேஷ் கோபி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நான் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன், ஏனென்றால் அது எனது கனவு. நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருடன் எனது விருப்பங்களைப் பற்றி விவாதிப்பேன். இருப்பினும், எனது புதிய பொறுப்புகளுக்கு முன்னுரிமைகளில் மாற்றம் தேவைப்பட்டால், நான் எந்தப் பாத்திரத்தையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். ஒரேயொரு அமைச்சர் பதவியில் அடைக்கப்படுவதை விட, அனைத்து துறைகளுக்கும் அணுகக்கூடிய எம்.பி.யாக பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறினார்.
இதனையடுத்து அவரிடம், ‘எந்த அமைச்சகத்திற்குத் தலைமை ஏற்க விரும்புகிறீர்கள்’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “நான் விரும்புவது என்னவென்றால், நான் கேரள மக்களுக்கான திட்டத்தை உறுதியுடன் கொண்டு செல்லும்போது, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதைச் செயல்படுத்த வேண்டும். தென்னிந்தியாவில் இருந்து எம்.பி.யாக நான் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்காகவும் வாதிடுவேன். எனது பிரச்சாரத்தின் போது, திருச்சூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால், எனது முயற்சிகள் தொகுதிக்கு அப்பாலும் நீட்டிக்கப்படும் என்று உறுதியளித்தேன்” என்று கூறினார்.