Skip to main content

"தமிழகத்திற்கு பலனளிக்கும்" - புதிய திட்ட அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

nirmala sitharaman

 

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரையை வசித்து வரும் அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

 

நிர்மாலா சீதாராமன் பட்ஜெட் உரை வருமாறு; "விவசாயப் பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படும். ட்ரோன்கள் மூலம் நிலங்களை அளப்பது, வேளாண் விளைச்சலைக் கணிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எண்ணெய் வித்துக்கள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எண்ணெய் வித்து இறக்குமதி குறைக்கப்படும்.

 

44 ஆயிரம் கோடியில் நீர் பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படும். கோதாவரி-பெண்ணையாறு -காவிரி உள்ளிட்ட ஐந்து நதிகள் இணைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோதாவரி-பெண்ணையாறு-காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. கோதாவரி-பெண்ணையாறு-காவிரி இணைப்புத் திட்டம் தமிழகத்திற்கு பலனளிக்கும். மாநிலங்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் நதிநீர் இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த நிதியுதவி வழங்கப்படும். 

 

1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்த கூடுதலாக 200 டிவி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும். ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற திட்டத்தின் கீழ் இந்த 200 சேனல்கள் உருவாக்கப்படும். 1-12 வகுப்புவரை மாநில கல்வி ஊக்குவிக்கப்படும். பள்ளிகளில் கல்வி போதித்தலை மேம்படுத்த உயர்தர மின்னணு வழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.  நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும். 

 

சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி கடன் வழங்க நடவடிக்கை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக தேசிய மனநல சிகிச்சைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.  பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடு கட்ட 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3.8 கோடி வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். 1.50 லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்படும். வங்கிச் சேவைகளுடன் தபால் துறையின் சேவைகளும் இணைக்கப்படும்". இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்