மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்திய பொருளாதார நிலை குறித்து, அதனை மேம்படுத்த எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் பேசினார். அப்போது, "ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு மூலம் கிடைக்கும் பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதேநேரம் நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. வரி விதிப்பு முறையில் பல புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. பொருளாதார வளர்ச்சிக்காக ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல தற்போதைய நிலையில் அந்நிய செலாவணி இருப்பு போதுமான அளவு உள்ளது.
வங்கிகளை பொறுத்தவரை, வங்கி நடைமுறைகள் அனைத்தும் மின்னணு மயமாக்கப்படும். வாராக் கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தப்பட உள்ளது. மேலும் வங்கிகள் கடன் வழங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார். மேலும் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் கூட்டத்தில் பங்கேற்கப்போவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.