பசு காவலர்கள் என்ற பெயரில் குழுவாக ஒன்று சேர்ந்து, அப்பாவி மக்களை தாக்கும் செயல்கள் வட இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் பசு காவலர்கள் என்று கூறி அப்பாவிகளை தாக்கினால் 5 வருடங்கள் சிறையில் அடைக்கும் சட்டத்தை கொண்டுவர மத்திய பிரதேச ஆளும் கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இதற்காக பசு வதை தடுப்புச்சட்டம் 2004-ல் திருத்தம் கொண்டுவரும் திட்டத்துக்கு அம்மாநில முதல்வர் கமல்நாத் ஒப்புதல் வழங்கி நேற்று கையொப்பமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பசு காவலர்களால் பல இடங்களில் அப்பாவி மக்கள் தாக்கப்பட்டதை அடுத்து, இதனை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் மாவட்டந்தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் ஜூலை 8-ம் தேதி தொடங்கும் மழைக்கால சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்த திருத்தம் கொண்டுவரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.