தேர்தல் தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோனத்தன் சங்மா குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ஜோனத்தன் சங்மா. இவர் சமீபத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேகாலயா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வில்லியம் நகர் தொகுதியில் போட்டியிட இருந்தார்.
இவர் கிழக்கு காரோ மலைப்பகுதியில் நேற்று மாலை பிரச்சாரம் முடித்துவிட்டு திரும்பி வரும்போது, சமண்டா பகுதியில் குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஜோனத்தனின் பாதுகாப்பிற்காக உடனிருந்த இரண்டு பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு, காரோ மலைப்பகுதியில், ‘ஜோனத்தனுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது. அப்படி வாக்களிக்கும் ஒவ்வொருவரும் சுட்டுக் கொல்லப்படுவார்கள்’ என காரோ நேஷனல் லிபரேஷன் ஆர்மி என்ற அமைப்பின் சார்பில் சுவர் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.