நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டபோதும், பல இடங்களில் கரோனா கட்டுப்பாடுகளால் களையிழந்து காணப்பட்டது.
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள பேராலயத்தில் நடந்த திருப்பலியில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிலைப் பார்வையிட்ட அவர், பிரார்த்தனையில் பங்கேற்றார். தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், மக்கள் வீடுகளிலேயே கொண்டாடினர்.
நகரில் உள்ள பிரதான பேராலயங்களின் முன்பு குடும்பத்துடன் குவிந்து கிறிஸ்து பிறப்பை வரவேற்றனர். மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், 50% மக்கள் மட்டுமே பிரார்த்தனையில் கலந்துகொள்ள வேண்டும் என அம்மாநில அரசு கூறியிருந்தது. அதன்படி, மாஹிமில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஆராதனைப் பாடி கிறிஸ்து பிறப்பை வரவேற்று அவர்கள் கொண்டாடினர். ஹிமாச்சல் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர். கேரளாவில் பேராலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தாடை அணிந்து குடும்பத்துடன் சென்று சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடினர்.