நரேந்திர மோடி, அமித்ஷாவுக்கு வளையல் அனுப்பும் காங்கிரஸ் மகளிர் அணி!
குஜராத் மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழையால் வெள்ளபாதிப்புகள் ஏற்பட்டன. இதனைப் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்ற கார்மீது பாஜக-வைச் சேர்ந்தவர்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் ராகுல் காந்தி பயணம் செய்த காரின் பின்பக்க கண்ணாடி முற்றிலுமாக சேதமடைந்தது. பாதுகாவலர் ஒருவர் காயமடைந்தார். ராகுல்காந்தி எந்தவித காயமும் இன்றி தப்பினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாஜக மாவட்ட இளைஞரணித் தலைவர் ஜயேஸ் தார்ஜி என்பவர் முக்கியக் குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவாவைச் சேர்ந்த காங்கிரஸ் மகளிரணியைச் சேர்ந்தவர்கள் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு வளையல்களை அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள், பல வண்ணங்களில் வளையல்களை அனுப்பியுள்ளோம். பிடித்த வளையல்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ராகுல் காந்தியின் மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது. அவரை அரசியலின் வழியாகவே எதிர்கொள்ள வேண்டும். குறுக்கு வழிகளில் அல்ல என தெரிவித்துள்ளனர்.
- ச.ப.மதிவாணன்