2021 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில் 120 நாட்கள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா முடிவு செய்துள்ளார்.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை அண்மையில் பாஜக நியமித்தது. அதன்பிறகு புதிய பொறுப்பாளர்களுடன் காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்திய பாஜக தலைவர் நட்டா, தேர்தல் நடைபெற உள்ள இந்த மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சூழலில், தேர்தல் நாடாகும் மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில் 120 நாட்கள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஸ்வவித்யாலயாவுக்கு சென்று குருக்களிடமிருந்து ஆசீர்வாதம் பெற்று தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார் நட்டா. வழிபாட்டிற்குப் பின்னர் பேசிய நட்டா, "நான் 120 நாட்களில் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளேன். பாஜகவை வலுப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் பயணிப்பேன். குருக்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக நான் இப்பயணத்தை இங்கிருந்து தொடங்கினேன்" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து அவர் இன்று தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். இன்று டெஹ்ராடூனுக்கு செல்லும் நட்டா, அங்கு விழா ஒன்றில் கலந்துகொள்கிறார். அதன்பின்னர் நான்கு நாட்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.