Skip to main content

தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! இன்று என்ன நடக்கும்?

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

mumbai sensex, nifty sharemarket

 

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, நேற்றும் (ஜூலை 6) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தன. சொல்லப் போனால் கடந்த நான்கு மாதங்களில் இண்டெக்ஸில் புதிய உயரத்தைப் பதிவு செய்திருக்கின்றன எனலாம்.

 

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 466 புள்ளிகள் / 1.29% வரை உயர்ந்து 36,487.28 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 156 புள்ளிகள்/ 1.47% ஏற்றம் கண்டு, 10,763.65 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது.

 

நேர்மறையான பேரியல் பொருளாதார தரவு மற்றும் கரோனா தடுப்பூசிகள் குறித்த நம்பிக்கையான செய்திகளால் நடப்பு ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்த நிலையில் இருந்து உலகப் பொருளதாரம் மீண்டும் முன்னேறும் என்ற உணர்வு முதலீட்டாளர்களிடம் அதிகரித்துள்ளது.

 

உள்நாட்டுத் தரப்பில் பார்த்தோமேயானால், ஹெச்.டி.எப்.சி. வங்கியிடம் இருந்து வலுவான கடன் வளர்ச்சி குறித்த தகவல்களும், இந்தியா- சீனா இடையேயான பதற்றத்தை எளிதாக்குவதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளும் முதலீட்டாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. 

 

எனினும்,‘’கரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த இந்தியா போராடிய போதும், பங்குச்சந்தைகள் கடந்த நான்கு மாதத்தில் இல்லாத வகையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்கிறார் கெம்கா. குறுகிய கால வேகம் சாதகமாக இருந்தபோதிலும், வர்த்தகர்கள் சரியான இடைவெளியில் லாபத்தை புக்கிங் செய்வது நல்லது,'' என்றும் கூறுகிறார் மோதிலால் ஓஸ்வால் சில்லரை வர்த்தக ஆராய்ச்சிப்பிரிவுத் தலைவர் கெம்கா.

 

சந்தை இன்று எப்படி இருக்கும்?:

 

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாகக் குறையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. நிப்டி இன்று (ஜூலை 8) இறங்குமுகத்தில் சென்றால் 10,702 - 10,640 புள்ளிகளாக அதன் ஆதரவு நிலை இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இண்டெக்ஸ் மேல்நோக்கி செல்லுமெனில், இண்டெக்ஸ் 10,818- 10,873 புள்ளிகளில் வர்த்தகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நம்பிக்கை அளிக்கும் வங்கிப் பங்குகள்: 

 

நேற்றைய (ஜூலை 6) நிலவரப்படி, நிப்டி வங்கிக் குறியீட்டு எண் 1.59 சதவீதம் அதிகரித்து 22,198.95 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. ஒருவேளை, இன்று வங்கிப் பங்குகள் சரிந்தாலும் 22,113- 22,028 புள்ளிகள் என்ற அளவில் இருக்கும். ஏற்றம் காணும்பட்சத்தில் 22,341- 22,484 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெறலாம் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள். 

 

இன்று முடிவுகள் வெளியிடும் நிறுவனங்கள்:

 

ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ், ஜி.கே.பி. ஆப்தால்மிக்ஸ், பஸல் இண்டர்நேஷனல், பெஸ்ட் அக்ரோலைப், பெஸ்ட் ஈஸ்டர்ன் ஹோட்டல்ஸ், பந்தேரி இன்ப்ராகான், இண்டியன் அக்ரிலிக்ஸ், மார்க் டெக்னோ புராஜக்ட்ஸ், பாலிமாக் தெர்மோபார்மர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜனவரி- மார்ச் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிடுகின்றன. இதன் அடிப்படையில் இந்நிறுவனப் பங்குகளின் முதலீடுகளில் ஏற்றம், இறக்கம் காணப்படும்.

 

http://onelink.to/nknapp

 

வாங்குவதற்கு ஏற்ற பங்குகள்:

 

ஐ.டி.ஐ., பாரத் டைனமிக்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ், ஐ.டி.பி.ஐ. வங்கி, ஆர்.ஐ.எல். ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் நேற்று வாங்கிக் குவித்தனர். இன்றும் இப்பங்குகளுக்கு வரவேற்பு இருக்கும் எனத் தெரிகிறது. பிசி பவர் கன்ட்ரோல்ஸ், ஓமாக்ஸ் லிமிடெட் ஆகிய பங்குகள் கடந்த 52 வாரத்தில் சந்தித்திராத சரிவைச் சந்தித்ததால் அப்பங்குகளை விற்றுவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள். 

 

ஒட்டுமொத்த அளவில், நிப்டி மற்றும் சென்செக்ஸில் காளையின் ஆதரவுப் போக்கே நிலவுவதால் இன்றும் முதலீட்டாளர்களிடையே உற்சாகத்திற்குக் குறைவிருக்காது என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்