எனது கணவரையும், மகனையும் கொன்றுவிட்டு, எனது மகளை நிர்வாணமாக ஊர்வலம் நடத்தினார்கள் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி மணிப்பூர் போலீசார் 4 பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட பெண்களில் ஒருவரின் தாயார் அளித்த பேட்டியில், “எனது மகன் மற்றும் கணவர், கும்பலால் கொல்லப்பட்டனர். எனது முழு நம்பிக்கையாக இருந்த என் இளைய மகனை இழந்துவிட்டேன். அவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து, எப்படியாவது கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது மூத்த மகனுக்கு வேலையில்லை. அதனால் எனது குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும் போது நம்பிக்கை இல்லாததைப் போல் உணர்கிறேன். எங்கள் கிராமத்திற்குச் செல்லும் எண்ணம் இல்லை, எங்கள் வீடு எரிக்கப்பட்டுவிட்டது, வயல்கள் அழிக்கப்பட்டுவிட்டன. நாங்கள் எங்கு போவோம், எனது கிராமம் முழுவதும் எரிக்கப்பட்டுவிட்டது. எங்களின் குடும்பத்தின் எதிர்காலம் என்னவென்றே தெரியவில்லை. நான் மிகவும் கோவத்துடன் இருக்கிறேன். எனது மகனையும், கணவரையும் கொன்ற அந்த கும்பல் எனது மகளை நிர்வாணமாக ஊர்வலம் நடத்தினர். இப்படி ஒரு அவமானகரமான செயலை நினைத்து நான் மிகவும் வேதனைப்பட்டேன். மணிப்பூர் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.