கேரள மாநிலம் வயநாட்டில் இன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் மேப்பாடு அடுத்த முண்டக்கை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதற்கு அடுத்து விடியற்காலை 4 மணிக்கு சூழல்மலை என்ற இடத்தில் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரண்டு இடத்திலும் சேர்த்து இதுவரை 80க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக கேரள அரசு அறிவித்துள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவால் அந்தப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. வழியில் உள்ள பாலங்கள் உடைந்து உள்ளதால் மீட்பு படையினர் ஹெலிகாப்டர் மூலமாக அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் கேரள மாநில மீட்பு படைகள், காவல்துறை, வருவாய்த்துறை போன்றவை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் மோடி 2 லட்ச ரூபாய் நிவாரண நிதியும் அடிபட்டவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காங்கிரஸ் எம் பியும், முன்னாள் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி இறந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்த கடுமையான நிலச்சரிவில் இறந்தவர்களை அரக்கோணத்தில் இருந்து சென்ற 30 தேசிய மீட்பு படையினர் களத்தில் இறங்கி மீட்டு வருகின்றனர். அதேபோன்று இந்தியாவின் பல பகுதியில் இருந்து மீட்பு படையினர் வயநாட்டிற்கு விரைந்து மீட்பு பணிகளை தொடர்ந்து வருகின்றனர். மேலும், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.