சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் ராமகிருஷ்ணன். 62 வயதான இவரது செல்போனுக்கு கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தி இவர் தங்கி இருக்கும் வீட்டிற்கு மின்சாரக் கட்டணம் செலுத்தும்படி தமிழ்நாடு மின்சார வாரியம் அனுப்புவது போல் இருந்துள்ளது.
இதை உண்மை என நம்பிய ராமகிருஷ்ணன் அந்த குறுஞ்செய்தியில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்ட லிங்க்கை அழுத்தியுள்ளார். இதன் மூலம் மின்சாரக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர் மின்சார வாரியத்திலிருந்து பேசுவதாகக் கூறி வங்கிப் பரிமாற்றத்திற்கு ஒருமுறை பயன்படுத்தும் ஓடிபி எண்ணை தெரிவிக்கும்படி கேட்டுள்ளார்.
ராமகிருஷ்ணன் ஓடிபி கொடுத்த சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 915 ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன் உடனடியாகச் சென்னை தென்மண்டல சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சத் சிங் என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. 49 வயதான மஞ்சத் சிங்கை சைபர் குற்றப்பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர்.
இதேபோல் நங்கநல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமும் பான் கார்டு அப்டேட் செய்வதாகக் கூறி ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை வங்கிக் கணக்கிலிருந்து மர்ம நபர் ஒருவர் திருடியுள்ளார். விசாரணையில் அதே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.