பள்ளி மாணவர்களை பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி நக்கீரன் ஆசிரியர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு முன் வழக்கறிஞர் ராம் சங்கர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முறையிட்டார்.
அந்த முறையீட்டையேற்ற உச்சநீதிமன்றம் நக்கீரன் ஆசிரியர் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று அந்த மனு நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், "பள்ளி குழந்தைகள், மாணவ-மாணவியர்கள் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம். அனைத்துப் பள்ளிக் கூடங்களிலும் சி.சி.டி.வி அமைப்பதை கட்டாயம் ஆகலாம்" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய மாநில அரசுகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.